தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' பட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிப்பது மட்டுமல்லாமல் தனது மக்கள் நல மன்றம் சார்பாக மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக இந்த உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவிர தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த முன்னெடுப்புக்காக கார்த்தி மற்றும் அவரது மன்ற நிர்வாகிகளுக்கு மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.