சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய்த் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதைத் தராமல் இதுபோன்ற செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகர் கார்த்தி சமூகவலைத்தளத்தில் சாடியுள்ளார். அதில்... ''டாக்டர் சைமனின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.