கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'எமர்ஜென்சி'. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரதமர் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தது. அதே சமயத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாஜ.க சார்பில் கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் புதிய ட்ரைலருடன் படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என சிரோன்மணி அகாலிதளம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா மத்திய சென்சார் போர்டு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2020- 2021 காலகட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையான நிலையில், கடந்த ஜூனில் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என அவர் பேசியிருந்ததற்குப் பா.ஜ.க. தலைமை கண்டம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.