உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் அருகில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்கள் கொண்ட பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் முஸ்லீம் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. மேலும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்” என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மண்டி தொகுதி எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்புக்கொள்கிறேன், ஹலாலுக்கு பதிலாக ‘மனிதநேயம்’ என்று மாற்றப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.