Skip to main content

எமர்ஜென்சி பட விவகாரம்; நீதிமன்ற அதிரடி உத்தரவு

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
Kangana Ranaut's 'Emergency' movie censor certificate issue

பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகவிருந்து பின்பு இந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து இந்தப்படம் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இருப்பதாக கூறி சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் படத்திற்கு தடை விதிக்க கோரி தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தையும் தணிக்கை குழுவினரையும் அணுகினர். மேலும் சண்டிகரில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ரவீந்தர் சிங் பாஸி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர், சீக்கிய சமூகத்துக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களின் மதிப்பை கங்கனா கெடுக்க முயன்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

இதையடுத்து இப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் பெறவில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்தார். பின்பு படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதாகக்கூறி பல காட்சிகளை நீக்க உத்தரவிட்டது. இதையடுத்து சென்சார் சான்றிதழ் தரக்கோரி நீதிமன்றத்தில் படக்குழு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் தேதி, “தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என கனத்தை இதயத்துடன் கங்கனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் தரக்கோரி மும்பை நீதி மன்றத்தில் படக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. புகார் மனுவில், அரசியல் நோக்கத்தால் பா.ஜ.க. எமர்ஜென்சி படத்தை வெளியிட தடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது படக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அக்டோபரில் நடைபெறவுள்ள ஹரியானா மாநிலத் தேர்தல் முடியும் வரை சென்சார் போர்டு படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக வாதிட்டார். இதையடுத்து செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் படத்தின் சான்றிதழைப் பற்றி இறுதி முடிவு எடுக்குமாறு சென்சார் போர்டு குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படத்தின் வெளியீட்டைத் தடுப்பதாக இருந்தாலும், சென்சார் போர்டு தைரியமாக முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து சென்சார் போர்டு சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் எமர்ஜென்சி படம் குறித்த முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

சார்ந்த செய்திகள்