பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். மேலும் மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கும், மோடிக்கும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் உண்டு என தெரிவித்திருந்தார். மேலும் "அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். இமாச்சலப் பிரதேச மக்கள் விரும்பி தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். கடினமாக உழைக்கக் கூடிய மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடத் தயார்" எனப் பேசியிருந்தார். கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் இந்த அரசியல் பேச்சு குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் பதிலளித்த அவர், "கங்கனா ரணாவத் கட்சியில் இணைவது வரவேற்கத்தக்கது. கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது எனது தனிபட்ட முடிவு அல்ல. அடிமட்டத்தில் இருந்து தொடங்கி தேர்தல் குழு, நாடாளுமன்ற குழு வரை ஒரு ஆலோசனை செயல்முறை உள்ளது.
பாஜகவில் சேர அனைவரையும் வரவேற்கிறோம். ஆனால் எந்த நிலையில் என்பதை கட்சி தீர்மானிக்கிறது. நிபந்தனைகளின் அடிப்படையில் நாங்கள் யாரையும் அழைத்துச் செல்வதில்லை. நிபந்தனையின்றி வர வேண்டும். அதைத் தான் அனைவரிடத்திலும் கூறி வருகிறோம்." என கூறியுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது நினைவு கூறத்தக்கது.