இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே தனது இரண்டாவது மனைவி ஜைனப் என்கிற அலியாவுக்கும் இவருக்கும் சமீபகாலமாகத் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. நவாசுதீன் சித்திக் அலியாவை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு அலியா விவாகரத்து கேட்டு பின்பு அதைத் திரும்பப் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு அலியா மீது நடிகரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவருக்கும் சொத்து தகராறு எனக் கூறப்பட்டது. இதனிடையே தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாகக் கூறி புகார் அளித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்பு இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த நவாசுதீன் சித்திக், தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் மௌனத்தால் எல்லா இடங்களிலும் நான் கெட்டவன் என்று அழைக்கப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம் இந்த நகைச்சுவைகள் எல்லாம் என் சிறிய குழந்தைகள் படிக்க நேரிடுமே என்று தான். முதலில் நானும் அலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களுக்குள் புரிதல் இருந்தது. அலியா அதிக பணத்தை மட்டுமே விரும்புகிறார். அதனால் என் மீதும் என் அம்மா மீதும் பல வழக்குகள் போட்டிருக்கிறார். அது அவருடைய வாடிக்கை. கடந்த காலத்திலும் அலியா இதையேதான் செய்திருக்கிறார். அவருடைய கோரிக்கையின் படி பணம் கொடுத்த போது வழக்கைத் திரும்பப் பெற்றார்.
எனது குழந்தைகள் விடுமுறையில் இந்தியா வரும்போதெல்லாம், அவர்கள் பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள். அவர்களை எப்படி வீட்டை விட்டு வெளியே நான் அனுப்ப முடியும். அப்போது நான் வீட்டில் இல்லை. அலியா ஏன் நான் குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்புவதை வீடியோ எடுக்கவில்லை? இந்த நாடகத்தில் அலியா குழந்தைகளை இழுத்து விட்டுள்ளார். என்னை மிரட்டி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக என் தொழிலைக் கெடுத்து அவருடைய சட்ட விரோதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார். நவாசுதீன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதால் நடிகை கங்கனா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.