2021ஆம் ஆண்டு வெளியான ‘தலைவி’ படத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக அரசியல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கங்கனா ரனாவத், அதையடுத்து தற்போது ‘எமர்ஜென்சி’ படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படத்தை கங்கனா ரனாவத், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகவிருந்து பின்பு இந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதே சமயத்தில் மக்களை தேர்தலில் கவனம் செலுத்திய கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் இப்படம் இன்று (6.09.2024) வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே இப்படத்தில் ட்ரைலரில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இருப்பதாக கூறி சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் படத்திற்கு தடை விதிக்க கோரி தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தையும் தணிக்கை குழுவினரையும் அணுகினர். இதையடுத்து இப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் பெறவில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்தார். பின்பு படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதாகக்கூறி பல காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்சார் சான்றிதழ் தரக்கோரி நீதிமன்றத்தில் படக்குழு சார்பில் முறையிட்டது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு நிலுவை காரணமாக இன்று ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகாதது குறித்து கங்கனா ரனாவத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “எமர்ஜென்சி திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கனத்தை இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.