Skip to main content

சர்ச்சையான பேச்சு; மன்னிப்பு கேட்ட கங்கனா

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
kangana ranaut apology for his farmer bill speech

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவார். அந்த வகையில் விவசாயிகள் குறித்து பேசி இரண்டு முறை சர்ச்சையில் சிக்கினார்.  2020- 2021 காலகட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து, 100 ரூபாய்க்காக போரட்டத்தில் உட்காரந்து இருக்காங்க என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையான நிலையில், கடந்த ஜூனில் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு தனியார் ஊடக பேட்டியில், “விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க கூடும். தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள்” என பேசியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையாக பா.ஜ.க. தலைமையே கங்னாவின் பேச்சை கண்டித்தது. இது தொடர்பாக பஞ்சாப் பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், “விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கூறியது கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவர் கூறிய கருத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. கங்கனா ரனாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை” என அறிக்கை வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களிடம், “நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 2021ல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் ரத்து செய்யப்பட்ட பண்ணைச் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவசாயிகளே அதைக் கோர வேண்டும். அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு வலிமையான தூணாக இருக்கிறார்கள். நான் அவர்களிடம் முறையிட விரும்புகிறேன். உங்கள் சொந்த நலனுக்காக சட்டங்கள் திரும்ப வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பேசு பொருளாக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கங்கனா. காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, கட்சி சார்பில் கருத்து சொல்ல கங்கனா ரணாவத்துக்கு அதிகாரம் இல்லை என எச்சரித்திருந்தார். 

இந்த நிலையில் கங்கனா ரனாவத் தன் பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் கருத்தை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அது யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. 

சார்ந்த செய்திகள்