மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகை மினுமுனீர் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் முன்வைத்தார். மேலும் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த பெண் நடிகை ஒருவரும் முகேஷ் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து கேரள அரசின் குழுவில் இருந்து முகேஷ் நீக்கப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கேரள மாநில காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என அக்கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே முகேஷ் பாலியல் வழக்கில் இருந்து முன் ஜாமீன் கேட்டு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு விசாரணை தொடர்பாக எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவால் இன்று முகேஷ் கைது செய்யப்பட்டார். பின்பு எர்ணாகுளத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரி பூங்குழலி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்பு மருத்துவப் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஏற்கனவே முன் ஜாமீன் கொடுக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார்.