மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகை மினுமுனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது புகார் கூறினார். அதில் ஒருவராக இடவேள பாபு இருந்தார். அவர் மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் உறுப்பினராக சேர்த்து வைக்க ஆலோசனை நடத்த நடிகையை நேரில் அழைத்துள்ளார். அதன் பேரில் அவர் வீட்டிற்கு சென்ற நடிகையிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இவ்வாறு அந்த நடிகை கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எர்ணாகுளம் காவல நிலையத்தில் இடவேள பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு இடவேளபாபுவை விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி நோட்டிஸ் அனுப்பியது. இந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள். பின்பு அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் வாங்கியிருந்ததால் அதனடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.