நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (18 ஆம் தேதி) புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
புதிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாலிவுட் நடிகைகள் கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். மேலும் கலந்து கொண்ட நடிகைகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, "புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில், பெண்கள் மேம்பட அதிகாரம் பெற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய நிகழ்வை ஆளும் கட்சியும் பிரதமர் மோடியும் செய்து காட்டியுள்ளார்கள். அவர் எந்த மசோதாவையும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் பெண்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அவர் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தது அற்புதம். இது நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறும். பெண்கள் தான் நாட்டின் முன்னுரிமை" எனக் கூறினார்.