நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி வருகிறார். ஆனால் கைவசம் எமர்ஜென்சி என்ற தலைப்பில் இந்திரா காந்தி பிரதமாக இருந்த காலத்தில் அவசரநிலை பிரகடனம் அறிவித்ததை அடிப்படையாக கொண்டு இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் ஜெயின் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். அதில் தென்னிந்தியா பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தென்னிந்தியர்களின் அரவணைப்பு அற்புதமானது. ஒரு நாள் என்னுடைய இயக்குநர் எனக்கு சாப்பாடு எடுத்து வருவதாக சொன்னார். சரி ஒரு லன்ச் பாக்ஸ் வரும் என நினைத்தேன். ஆனால் அவர் விதவிதமான லன்ச் பாக்ஸ் எடுத்து வந்தார். அதில் வகைவகையான உணவுகள் இருந்தது. இதற்கு முன்னாடி இது போன்ற உணவுகளை நான் பார்த்தது இல்லை.
என்னுடைய குரு கூட கோயம்பத்தூரில்தான் இருக்கிறார். காஃபி, மல்லி பூ, காஞ்சீபுரம் பட்டுப் புடவை என எல்லாமே எனக்கு பிடிக்கும். நான் வளர்ந்த இடத்தில் வருஷத்துக்கு ஒரு முறைதான் புடவை கட்டுவார்கள். நிறைய பேருக்கு புடவை எப்படி கட்ட வேண்டும் என்றுக் கூட தெரியாது. ஆனால் இங்கு பெண்களை போற்றுகிறார்கள். அவர்கள் அணியும் நகைகள், குங்குமம் எல்லாமே அதிநவீன கலை” என்றார்.