18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5.30 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 236 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க” என்றார்.