அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் கடந்த 6ஆம் தேதி ஒன்று கூடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் பேசிய தாணு, “இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா இந்த மாதிரி தவறை சத்தியமாக செய்யவில்லை. ஏனென்றால் அவர் மனம்விட்டு என்னிடம் பேசியிருக்கிறார். ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு பாரதிராஜாவை சூழ்நிலை கைதி மாதிரி ஆக்கிவிட்டார்கள். உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில் தான் இருந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். பல பேர் பல விதமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அவரிடம் பேசும் போது, அனைவரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. இந்தவொரு பதட்டத்தில் தான் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து, சங்கத்திலிருந்து பாரதிராஜாவை நீக்க வேண்டும் என்ற மனுவை பத்திரப்பதிவு அலுவலரிடம் அளித்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் தனக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக பாரதிராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், "முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேரின் கமல்ஹாசன் வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல்போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம் போராடி நிரூபிக்கும் நன்றிகள்". என்று குறிப்பிட்டுள்ளார்.