கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் கமல், கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை உருவக் கேலி செய்த அசீமையும் மணிகண்டனையும் கண்டித்துப் பேசினார் கமல். இவ்வாறு கமல் பேசியது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
இது தொடர்பாக மௌலி என்ற ரசிகர் ஒருவர் ட்விட்டரில், "கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் மற்றும் மணி இருவரையும் கமல் கையாண்ட விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்திருக்கும். அதோடு நிறுத்தாமல், ஏடிகேவை அனைவரையும் போல நடித்துக் காண்பிக்கச் செய்து வித்தியாசத்தை விளக்கியிருந்தார். மேலும் மற்றவர்களைப் பார்த்துச் சிரிப்பதற்கும் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி கமல் காட்டியிருந்தார். தொலைக்காட்சி என்பது சக்தி வாய்ந்தது. அதை நாம் மறந்துவிடக்கூடாது" என கமலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்குப் பதிலளித்த கமல், "நன்றி மெளலி. அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைப்போல் பெருமை மிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்" எனப் பதிலளித்தார். கமலின் இந்தப் பதில் பதிவிற்கு, "தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய கருத்துகள் தங்களை வந்தடைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்றைக் கூறுகிறேன். திரைத்துறையில் மாற்றுப் பாலினத்தவர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என அந்த ரசிகர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், "இயக்குநரும், மூத்த நடிகருமான மெளலி எனத் தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும் தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். கமலின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.