நடிப்பு, இயக்கம், பாடுவது எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கும் கமல், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி எனப் பல ஹிட் படங்களைத் தயாரித்த நிலையில் கடைசியாக விக்ரம் படத்தைத் தயாரித்திருந்தது. இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ராஜ் கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஒரு எச்சரிக்கை அறிவிப்பு அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த மோசடி குறித்துப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், ' 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ.வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.