இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். இந்த படத்தின் கதையை முதலில் எம்.ஜி.ஆர்தான் வாங்கி வைத்திருந்தார். அவர், எவ்வளவு சீக்கிரம் இதை படமாக எடுக்க முடியுமோ அதை எடுத்துடுன்னு சொன்னார். அப்போ புரியல இப்போதான் ஏன் சொன்னாருன்னு புரியுது. இப்போது அந்த கதையை எடுக்க நிறைய பேர் வந்துவிட்டார்கள். நானும் எடுக்கலாம் என்று முயற்சி செய்து எடுக்கமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றார்.
மேலும் கமல், இந்த கதையை படமாக எடுத்தால் முதலில் வந்தியத்தேவனாக நடிக்க நான்தான் ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தேன். இதை போய் சிவாஜியிடம் சொன்னேன். ஆனால் உடனே அவர், “டேய் கமலா வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்கவை” என்றார். ஐயா அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கலாம் என்று நினைத்தேன் என்றேன், அதற்கு “நீ அருண்மொழி வர்மனாக நடி என்றார். ஆனால் அன்று நடக்காமல் போன நிலையில் இன்று வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்" என்றார்.