தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020 செப்டம்பர் மாதம் 25தேதி காலமானார். இவரின் மகன் எஸ்பி.சரண், கடந்த 23ஆம் தேதி எஸ். பி. பாலசுப்ரமணியம் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகருக்கு ‘எஸ்பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் வைக்க வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.
எஸ்.பி.சரணின் கோரிக்கையை ஏற்ற மு.க.ஸ்டாலின் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த அதே நாளான நேற்று(25.09.2024) காம்தார் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், “இரண்டு நாளைக்கு முன்பு காம்தார் சாலைக்கு அப்பா பெயரை வைக்க கோரி மனு கொடுக்க சென்றேன். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேலும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திலும் கோரிக்கை வைத்தேன். அதே போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க முயன்றேன் அவர் பிஸியாக இருந்ததால் சந்திக்க முடியாமல் போனது. இருந்தாலும் கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில் அதற்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் அளித்ததுள்ளனர். இது அப்பாவின் நினைவு நாளில் வந்தது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் சந்தித்த அமைச்சர்களுக்கும் மற்றும் முதலமைச்சருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனும் தற்போது முதலமைச்சருக்கு நன்றி கூறியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.