1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வரலாற்று நிகழ்வை 83 என்று இயக்குனர் கபீர் கான் படமாக எடுக்கிறார். இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்க, ஸ்ரீகாந்தாக தமிழக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள், இயக்குனர் கபீர் கான், கபில்தேவ், ஸ்ரீகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
அப்போது பேசிய கமல்ஹாசன், “ஸ்ரீகாந்த்தை எனக்கு சிறு வயதிலிருந்து பழக்கமானவர். அவருடைய இரண்டு முகமும் எனக்கு தெரியும். பஞ்சத்தந்திரம் படத்தில் யூகி சேது கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக நான் நினைத்தது ஸ்ரீகாந்தைதான். வரேன், வரேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் வரவில்லை. அதேபோல அபூர்வ சகோதரர்கள் படத்திலும் அவருக்காக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். அப்போதும் அவரால் நடிக்க முடியாமல்” போனது என்றார்.
கமலுக்கு அருகிலேயே சோகமாக நின்ற ஸ்ரீகாந்த், பின்னர் பேசுகையில், “உங்களுடன் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. இப்போது வாய்ப்பு கொடுங்கள் பிண்ணிவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.