தமிழ்த் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரை கௌரவிக்கும் விதமாக, ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ் குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, வடிவேலு, நயன்தாரா, நடிகை மற்றும் ஆந்திர அமைச்சரான ரோஜா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் கமல்ஹாசன் பேசுகையில், “கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. பாடல்கள் பிடியிலிருந்த சினிமாவினை வசனத்தின் பக்கம் வசப்படுத்தியவர் என்றால் அது கலைஞர் தான்.
எனது நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். அவருடைய இந்த பண்பு கலைஞரிடமிருந்து வந்தது. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி. எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஆளுமைகளையும் தனது வசனங்கள் மூலம் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாய் மாற்றியவர் கருணாநிதி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று கருணாநிதியிடம் கற்றுக் கொண்டதால்தான் இன்று பிக்பாஸ் மூலம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.