‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன், தஸ்தான்’, ‘மொகல்-இ-அஸாம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்..
"இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். திலீப் குமார் சாஹேப், என்னைப் போன்ற பல நடிகர்கள் தங்களின் செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தரத்தையும், அர்ப்பணிப்பையும் உங்கள் நடிப்பு கற்பிக்கும். உண்மையிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர், இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ஆனால், அவரது நடிப்பை பொக்கிஷமாக நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். அவரது குறைந்தபட்ச அணுகுமுறையை சமகால நடிகர்கள் இன்னும் கூட முயன்றுகொண்டிருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி" என பதிவிட்டுள்ளார்.