கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம் குணா. ஸ்வாதி சித்ரா இண்டர்நேஷ்னல் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று எவர் கிரீன் படமாக இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் குணா படத்தின் பின்னணியில் கதை நடப்பதாகவும் மற்றும் குணா படத்தின் பாடல்களும் இடம்பெற்றிருந்தது. இதனால் குணா படம் பேசுபொருளாக அப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் கடந்த ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் குணா படத்தை ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து குணா பட ரீ ரிலீஸுக்கு எதிராக கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், குணா படத்தின் பதிப்புரிமையை நான் வாங்கியுள்ளதாகவும் இதனால் ரீ ரிலீஸ் செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய இடைக்கால தடைவிதித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செந்தில்குமார் , ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தை வெளியிடும் உரிமையை கோர முடியாது எனத் வாதிட்டார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்கள். மேலும் படம் ரிலிஸாகும் போது வழக்கறிஞரை நியமித்து, திரையரங்க வசூல் தொகையை வழக்கின் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.