Skip to main content

ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் பரிசு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

kamal gifted driver sharmila

 

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் கொண்டுள்ளார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதன்பிறகு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றார். அதன் மூலம் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

 

அண்மையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு நிகழ்வாக கோவையில், பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த கனிமொழி,  ஷர்மிளாவிற்கு கைக் கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். 

 

இதனைத் தொடர்ந்து கனிமொழி வருகைக்குப் பின் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கும் பெண் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் அவரது பணியை ஷர்மிளா விட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாக பேருந்து உரிமையாளர் தரப்பு வைத்த குற்றச்சாட்டால் அவரது பணி பறிபோனது என்ற தகவலும் வெளியானது. பின்பு இதனை அறிந்த கனிமொழி, ஷர்மிளா வேலை இழந்தது குறித்து விசாரித்து அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவது குறித்து உறுதியளித்தார். அதன்படி அவருக்கு உக்கடம்-போகம்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து நிறுவனமான கிருஷ்ணா நிறுவனம் ஓட்டுநர் பணி அளித்துள்ளது.  

 

இந்நிலையில் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'கமல் பண்பாட்டு மையம்' சார்பில் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் என் கவனத்திற்கு வந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

 

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல, பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவோராகத் தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்