பழம் பெரும் தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் அருண் வீரப்பன் நேற்று தனது 90வது வயதில் காலமானார். இவர் கியூப் நிறுவன தலைவராகவும் இருந்துள்ளார். கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா உட்பட பல்வேறு திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார்.
வயது முதிவு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். மாரடைப்பு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கமல்ஹாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.