கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' பிரபலமான நூல்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 1950-களில் மதுரை மாவட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டபோது, நீர்ப்பிடிப்புப் பகுதியை உருவாக்குவதற்காக 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. தண்ணீருக்கு அடியில் தங்கள் நிலத்தை இழந்த அந்த அகதிகளின் கதையை இந்த நாவல் விவரிக்கிறது.
2003 ஆம் ஆண்டு சிறந்த இலக்கியப் படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை இந்த நாவலுக்காக வைரமுத்து வென்றார். இந்த நாவல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. இந்த நிலையில், இந்த நாவலை படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை 'மதயானைக்கூட்டம்', 'இராவண கோட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதோடு விக்ரம் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் சுகுமாரன் இயக்கிய 'இராவண கோட்டம்' விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.