தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஸ்ரீதர் இயக்கத்தில் 1959ஆம் ஆண்டு வெளியான கல்யாண பரிசு படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"கல்யாணப் பரிசு படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும் காதலர்கள். சரோஜா தேவி வீட்டு மாடியிலேயே ஜெமினி கணேசன் குடியிருப்பார். 'வாடிக்கை மறந்திடுவேனோ...' எனப் பாட்டு பாடி கடற்கரையில் கட்டி உருண்டு இருவரும் காதல் செய்வார்கள். சரோஜா தேவியின் அக்கா விஜயகுமாரி வீட்டில் துணி தைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகத்தான் தன்னுடைய தங்கை சரோஜா தேவியைப் படிக்க வைப்பார். குனிந்த தலை நிமிராமல் துணி தைத்துக்கொண்டே இருப்பார் விஜயகுமாரி.
அன்று ஒருநாள் மாடியிலிருந்து ஜெமினி கணேசன் இறங்கிவருகையில் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்துவிடுகிறாள். ஜெமினி கணேசன் அந்த வீட்டிற்கு குடி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அன்றுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தவள், அவர் அழகில் மெய் மறந்துவிடுகிறாள். அதில் அவளுக்குள் சிறு தடுமாற்றம் வந்துவிடுகிறது. உடனே தங்கை சரோஜா தேவியை அழைத்து அவனைப் பற்றி கேட்கிறாள். அவர் குடி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதே அக்கா என்று அவர் கூற, இன்றுதான் நான் அவரைப் பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு அவர் பார்க்க அழகா இருக்கார்ல எனக் கூறுகிறாள். உடனே சரோஜா தேவி உனக்கு பிடிச்சிருக்கா அக்கா எனக் கேட்க, விஜயகுமாரி சிரிக்கிறாள். தங்கையும் அவரும் காதலிக்கும் விஷயம் இவளுக்குத் தெரியாது.
மறுநாள் ஜெமினி கணேசனைக் கடற்கரையில் சந்திக்கிறார் சரோஜா தேவி. அவரிடம் நடந்த விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய அக்காவை கல்யாணம் செய்துகொள் என்கிறாள். உன்னை காதலித்துவிட்டு எப்படி உன் அக்காவை நான் திருமணம் செய்துகொள்ள முடியும் என அவர் மறுத்துவிடுகிறார். கஷ்டப்பட்டு துணி தைத்து அதில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக என்னை படிக்க வைக்கிறாள் என் அக்கா. இதுவரை என்னிடம் எதுவும் அவள் கேட்டதேயில்லை. முதல்முறையாக என்னிடம் ஒன்று கேட்டிருக்கிறாள் எனக் கூறி அவருக்கு அழுத்தம் கொடுக்க, அவர் முடியாது எனக் கூறிவிடுகிறார். அப்படியென்றால் நானும் உன்னை இனி காதலிக்கமாட்டேன் எனக் கூறிவிடுவார் சரோஜா தேவி.
நாம் காதலிக்கவில்லை என்றால் எப்படியும் உன் வீட்டில் உனக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்துவைப்பார்களே... அது ஏன் என் அக்காவாக இருக்கக்கூடாது என்பார் சரோஜா தேவி. பின், விஜயகுமாரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்துவிடும். அக்காவிற்கு திருமணம் செய்துவைத்துவிட்டு அவர்களை ரயிலில் ஏற்றிவிட்டு தனியாக நடந்துவரும் போது 'காதலிலே தோல்வியுற்றாள்...' என்று ஒரு பாடல் வரும். பட்டுக்கோட்டை எழுதிய அந்தப் பாடல் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். பின், விஜயகுமாரி இறந்துவிடுவார். மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட ஜெமினி கணேசன், குழந்தையை சரோஜா தேவியிடம் ஒப்படைக்கலாம் எனக் கிளம்பிவருவார். இங்கு வந்தால் சரோஜா தேவிக்கு கல்யாணம் நடந்துகொண்டிருக்கும். ஒரு காகிதத்தில் கல்யாண பரிசு என்று எழுதி, அதைக் குழந்தை கையில் கொடுத்து, மணமேடையில் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டி அதுதான் உன் அம்மா... அவரிடம் சென்று கொடு என்று குழந்தையை அனுப்பிவைப்பார். குழந்தை கொடுத்ததை வாங்கி சரோஜா தேவி படித்துப் பார்ப்பார். நிமிர்ந்து பார்த்தால் ஜெமினி கணேசன் தூரத்தில் நடந்துபோய்க்கொண்டு இருப்பார். அற்புதமான க்ளைமாக்ஸ் காட்சியாக அந்தக் காட்சி இருக்கும்".