இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சாரக் கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல் அண்மையில் இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்திருந்தார். இப்போது 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடரில் நடித்து வருகிறார்.
இத்தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசியல்வாதிகள் குறித்து ஒரு கருத்தை முன்வைத்தார். "இந்தியா போன்ற நாட்டில் மாற்றம் என்பது மிக மிக மெதுவாகத் தான் நடக்கிறது. ஏனென்றால் நாம் நமது பாரம்பரியம் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கியுள்ளோம், நிச்சயமாக இது கல்வியுடன் தொடர்புடையது. கல்வி அறிவு இல்லாத ஒரு பின்னணியில் தான் நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
மன்னிக்கவும். இதை நான் வெளியில் சொல்லித்தான் ஆகவேண்டும். நான் தலைவர்களால் ஆளப்படுகிறேன். அவர்களில் பலர், கண்ணோட்டம் இல்லாதவர்கள். அதனால் கல்வி தான் அவர்களுக்கு தரும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கவனிக்கும் வாய்ப்பையாவது பெறுவார்கள்" என்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்ப பின்பு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல; நாட்டை சரியான பாதையில் வழி நடத்தும் சில சிறந்த தலைவர்களும் நம்மிடம் உள்ளனர்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கஜோலின் கருத்து குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் அபிஷேக் சிங்வி, "கஜோல், நாட்டில் உள்ள படிக்காத தலைவர்களைப் பற்றி அவர் பேசும்போது எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் பாஜ்பாய்கள் மட்டும் ஏன் இப்படி வருத்தப்படுகிறார்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.