நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘சீஸ்பைரஸி' ஆவணப்படம் தன்னுடைய இதயத்தை நொறுக்கும்படியாக உள்ளது என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘சீஸ்பைரஸி' படத்தை தற்போதுதான் பார்த்தேன். என்னுடைய இதயத்தை நொறுங்கச் செய்யக்கூடிய ஒன்றாக அப்படம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மீன்பிடி நிறுவனங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதும், இது தொடர்பாக யாரும் குரல் எழுப்பாததும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆழ்கடலில் நடப்பவற்றைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டங்களும், அரசாங்க கட்டுப்பாடுகளும் இல்லை. நாம் சாப்பிடும் கடல் உணவு எப்படி கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் கடலில் அழிந்து வரும் இனங்களைத் திருட மிகப்பெரிய மாஃபியா கும்பலே செயல்படுகிறது. தேவையான அளவு மட்டுமே மீன்பிடித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை. இது வருந்தத்தக்க விஷயம் என்றாலும், இதுதான் உண்மை. நம் கடல்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே. நாம் ஏன் ஈயம், பாதரசம், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உண்ண வேண்டும்? அனைத்துவிதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் என எதுவும் இல்லை.
நான் பல வருடங்களாக தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளையே உண்கிறேன். இதனால் ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளோ, குறைபாடுகளோ எனக்கு இல்லை. நமது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்ய வேண்டியது பற்றிய நிலைபாட்டை தற்போது நாம் எடுக்க வேண்டும். நம் கடல் அழிந்தால், நாமும் அழிவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.