தமிழில் ‘மாடத்தி', 'செங்கடல்' மற்றும் பல ஆவணப் படங்களை இயக்கி பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது.
காளி போஸ்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதனால் உடனடியாக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லீனா மணிமேகலை அடுத்ததாக இயக்கும் படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை பார்வதி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'தன்யா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவ லீனா மணிமேகலையின் 'காளி' பட போஸ்டர் பெரும் சர்ச்சையானதால் அந்த வகையில் இப்படமும் ஏதாவது சர்ச்சையை உருவாக்குமா என்பது படத்தின் போஸ்டர் வெளியான பின்பே தெரிய வரும்.