தமிழ்த்திரைப்பட நடிகர்கள் தெலுங்கு மற்றும் இந்தி தயாரிப்பாளர்களுடன் இணைந்து படம் நடிப்பதை தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'ஹே சாகோ...' என்ற ம்யூசிக் வீடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கே.ராஜன், "பெரிய பட்ஜெட் படங்களின் விழாக்களில் பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்களை வாழ்த்த யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால், சின்ன பட்ஜெட் படங்களின் விழாவுக்கு யாரும் வருவதில்லை. சின்ன படங்கள் வெற்றிபெற்று அந்த தயாரிப்பாளர் வாழ்ந்தால் மட்டுமே சினிமா வாழும். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு எந்த லாபமும் இல்லை.
நம்முடைய ஹீரோக்கள் தெலுங்கு, இந்தி தயாரிப்பாளர்களை வாழ வைக்க சென்றுவிட்டார்கள். அவர்களால் இங்குள்ள தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று நினைத்து, வாழ வழியில்லாமல் இருக்கும் இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்களை வாழ வைக்க முடிவுசெய்துவிட்டார்கள் போல. ஸ்ரீதேவியின் கணவர் உணவிற்கே வழியில்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்று அவருக்கு அஜித் மூன்று படம் கொடுத்திருக்கிறார்" என விமர்சனம் செய்தார்.