ஆர்.கே.வி இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி காதல் கதை'. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், 'கடைசி காதல் கதை' படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் தொற்றால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டும். திரையரங்குகள் திறக்கப்பட்டு சினிமாத்துறை விரைவில் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் ஆகிய மூன்றும்தான் என்னுடைய பிரார்த்தனையாக இருந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் வர ஆரம்பித்துள்ளது. சில படங்கள் ஹவுஸ்புல்லாக ஓடின. சமீபத்தில் வந்த ஒரு சில படங்களைப் பார்த்தபோது தியேட்டர்கள் திறக்கப்படாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகுந்த வருத்தத்தோடு இதைச் சொல்கிறேன். பொதுநல வழக்குகூட போட்டுவிடலாமா என்று நினைத்தேன். அது மாதிரியான படங்கள் ஓடி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது. அந்த மாதிரியான படங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும். ஏனென்றால் அந்தப் படங்களைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் என்று உங்கள் பெயரில் போட்டு அது மாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.