சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 200 நாடுகளுக்கும் மேல் பரவி, உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைய வாய்ப்புள்ள நிலையில் உ.பி. மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சனை தீர அனைத்து மத டிரஸ்ட்கள் வைத்திருக்கும் பணத்தில் 80 சதவீதத்தை அரசு பயன்படுத்திக் கொண்டால், இந்திய பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் அடைந்து விடும் என்றும் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமருக்கு உ.பி. மாணவர் எழுதிய கடிதத்துக்கு இயக்குனர் கே.பாக்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது... ''இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளேன். நீங்களும் இதேபோல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். மனிதனுக்கு ஏற்றமோ, தாழ்வோ வரும்போது இதுவும் கடந்து போகும் என்பது ஞாபகத்திற்கு வரவேண்டும். இந்த இக்கட்டான கரோனா பிரச்சனையும் அதுபோல் கடந்து போகும். அனைவரும் தனித்திருக்க வேண்டும். அரசு கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். உதவி செய்வதிலேயே பெரிய உதவி பிரதிபலன் பாராது செய்யும் உதவிதான் என்பது போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அதிகாரிகள் உள்பட பலர் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.