பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாகத்தில் சந்திரமுகியாக தன்னை நினைத்து கொண்டு ஜோதிகா நடித்த நிலையில் பலரது பாராட்டை பெற்றிருந்தது. மேலும் அவருக்கு அந்தாண்டிற்கான கலைமாமணி விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில விருது சிறந்த நடிகைக்காக கிடைத்தது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்திருந்தார். மேலும், "ஜோதிகா மாதிரி கங்கனா நடித்துள்ளார்களா என என்னிடம் நிறைய பேர் கேக்குறாங்க. ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைச்சு, சந்திரமுகி எப்படியிருப்பாங்களோ அப்படி நடிச்சு காமிச்சாங்க. ஆனால் இந்த படத்தின் ஒரிஜினல் சந்திரமுகியாக கங்கனா வராங்க. அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு எவ்ளோ உழைப்பை கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்காங்க" என்றார்.
இந்நிலையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கங்கனாவிற்கு ஜோதிகா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோதிகா பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்திய சினிமாவின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா, சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவரின் சந்திரமுகி கெட்டப் அருமையாக இருக்கிறது. அவரின் படங்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகை, அவருக்காகவே இந்த படத்தை பார்க்க காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டு பி. வாசு மற்றும் லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.