திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியின் போது யூடியூப் மூலம் பொதுமக்கள் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் கொடுக்கும் கலாச்சாரம் இன்று அதிகமாகி விட்டது. மோசமாக படத்திற்கு விமர்சனம் வந்தால் படம் தோல்வியடைந்து அது தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்களுக்கு யூ டியூப் சேனல்களில் வரும் பொதுமக்கள் விமர்சனம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் யூ டியூப் சேனல்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுக்கத் தடை செய்து முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் செய்யும் நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிடத் தடை கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “விமர்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல்துறையிடம் புகாரளிக்கலாம்” என்று கருத்து கூறியுள்ளார். மேலும் 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிடத் தடை கோரியதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on 03/12/2024 | Edited on 03/12/2024