'காஃபி வித் காதல்' படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வரலாறு முக்கியம்'. இப்படத்தில் காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடிக்க சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' சார்பாக ஆர்.பி சௌத்ரி தயாரிக்க ஷான் ரஹ்மான் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனால் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியுள்ளனர்.
பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ஜீவா. அப்போது வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு எந்த படம் முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "முதலில் எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்குதோ அந்த படத்தை பார்ப்பேன். இரண்டு பேருமே திரைத் துறையில் இருப்பவர்கள் தான், அவர்களை பார்த்து தான் நாங்கள் எல்லாம் வளர்ந்திருக்கிறோம். இந்த கேள்வியை கேட்பீர்கள் என்று தெரியும். நான் பதில் சொல்லமாட்டேன்" என ஜாலியாக பேசினார்.
ரசிகர்கள் விபரீத முடிவுகள் எடுப்பது பற்றிய கேள்விக்கு "சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு நிறைந்த துறை. அதனால் படங்களை பொழுதுபோக்காகத்தான் அணுக வேண்டும். எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சினிமாவில் எதுவுமே உண்மை இல்லை என்று அனைவருக்குமே தெரியும். நான் நிறைய படங்கள் பார்த்து உத்வேகம் ஆகியிருக்கிறேன். அதனால் ரசிகர்கள் படம் பார்த்து மோட்டிவேட் தான் ஆகவேண்டும். இருப்பினும் சில ரசிகர்கள் சீரியஸாக சில விபரீத முடிவுகள் எடுக்கிறார்கள். அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என்றார்.