மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் வரும் பாடல்களை மேடையில் இசையமைத்து ரசிகர்களை சிறகடிக்கச் செய்தார். மாலை 7:30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவை பாடகர்கள் சின்மயி மற்றும் கார்த்திக் தொகுத்து வழங்கினார்கள்.
அரவிந்த்சாமி - அதிதிராவ், அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் , சிம்பு - டயானா எரப்பா என படத்தின் டிரெய்லரில் வந்ததுபோல் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி பேசினார்கள். இவர்களை தொடர்ந்து மேடையேறிய வைரமுத்து, '35 வருடங்களாக அயராது உழைப்பவர் மணிரத்னம்' என்று பாராட்டினார். "மணிரத்னம் சிறந்த படங்களை உருவாக்கியிருக்கிறார். தனது மெட்ராஸ் டாக்கீஸில் சிறந்த படைப்புகளைத் தயாரித்திருக்கிறார். ஆனால், அவரது மிக சிறந்த படைப்பை அவர் மெட்ராஸ் டாக்கீஸில் தயாரிக்கவில்லை, கவிதாலயாவில்தான் தயாரித்தார். அந்தப் படைப்பு ரோஜா அல்ல, ஏ.ஆர் ரஹ்மான்தான்" என்றார்.
வைரமுத்து பேசிய பின்னர், இயக்குனர் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் மேடையேறினார்கள். அப்போது மேடையில் இருந்த இவர்கள் மூன்று பேரிடமும் பாடகர் கார்த்த்திக் ஒரு கேள்வியை எழுப்பினார். உங்கள் கூட்டணியில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது? என்றார். அதற்கு வைரமுத்து,”பம்பாயில் வரும் உயிரே உயிரே பாடல். மணிரத்னம்,” தமிழா தமிழா”. ஏ.ஆர்.ரஹ்மான்,”கண்ணாளனே” என்றார். அப்போது அவர் 1994ஆம் ஆண்டு நடந்த, பலரும் அறியாத ஒரு நினைவைப் பகிர்ந்துகொண்டார் வைரமுத்து. ”அப்போது ஒரு நாள், ரஹ்மானுடைய ஸ்டூடியோவிற்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, லேட்டஸ்டாக இசையமைத்த ட்யூன் போடுங்கள் என்று கேட்டார். அப்போது ரஹ்மான் போட்டுக்காட்டிய பாடல் மணிரத்னத்தின் பம்பாய் படத்தின் 'கண்ணாளனே'" என்று அவர்களுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.