அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரிஸ் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெய், அருண்ராஜா காமராஜ், ஜெயச்சந்திர ஹாஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு படம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். அப்போது எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹாஷ்மி பேசுகையில், "இது எனக்கு முதல் பெரிய மேடை. சினிமாவில் மேடை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். இப்படியொரு பாசிட்டிவான மேடை கிடைப்பது இன்னும் கஷ்டம். இதை சாத்தியப்படுத்திய அருண்ராஜாவிற்கு ரொம்ப நன்றி. நான் சீனு ராமசாமி சாருடைய அசோசியேட் டைரக்டர். ஆனால் இயக்கம் தான் என்னுடைய கனவு. அருண்ராஜா காமராஜ் படங்கள் மேல் ரொம்ப மரியாதை இருக்கு. அவர் மேல் இருக்கிற அன்பினால் உள்ளே போனது. அப்புறம் லேபில் உலகம் பயங்கரமா இழுத்திருச்சு. இந்த தொடருக்கு எழுதும் பணிகள் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. சவாலா இருந்துச்சு. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
அருண்ராஜா காமராஜ், இதில் தெரியாமல் கூட ஒரு வசனத்திலோ சின்ன ரியாக்ஷனிலோ சமூக இழவு வந்துவிடக் கூடாது, அதை உடைக்கிறது தான் இந்த கதையின் நோக்கம் என்பதில் தெளிவாக இருந்தார். அதுதான் ஒட்டுமொத்த திரைக்கதை எழுதும் பணியையே வழி நடத்தியது. அவருடைய உதவி இயக்குநர்கள் டீம் பயங்கரமானது. அப்படியொரு டீம் அமைந்தால் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் வேலை பார்க்கலாம். கலை என்பது பொதுவாகவே நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ, அதைவிட அதிகமா திருப்பி கொடுக்கும். அதை நான் நம்புகிறேன். அது வெறும் பணம் பொருளாக மட்டுமல்ல. இந்த தொடரில் எவ்வளவு கொடுத்திருக்கோமோ அதை விட அதிகமா அது எனக்கு கற்றுக் கொடுத்திருக்கு.
லேபில் என்றால், இவன்லாம் இப்படித்தான் இங்க இருந்து வருபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என ஒரு அடையாளத்தை இந்த சமூகம் திணிச்சுக்கிட்டே இருக்கும். அதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் இருக்கு. அது சில பேருக்கு வசதியாக மாறிவிடும். அதை உடைத்து நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வரும். சமூகம் நம் மேல் திணிக்கிற அடையாளத்திற்கும் நாம உருவாக்க நினைக்கிற அடையாளத்திற்கும் இடையிலான போராட்டம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் தான் இந்த லேபில். இதை எது கூட வேண்டுமென்றாலும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். இதில் இடம் சார்ந்த முத்திரையை பற்றி லேபில் பேசியிருக்கு. ஆனால் இதை சாதி சார்ந்து, மதம் சார்ந்து, நிறம் சார்ந்து, இனம், மொழி என எதுகூட வேண்டுமென்றாலும் தொடர்புப்படுத்தி கொள்ளலாம்.
தப்பு பண்ணுபவர்கள் எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட அடையாளத்தோடு வருபவர்கள், இப்படித்தான் இருப்பாங்க என்ற முத்திரை பெரிய அநீதி. நாம உழைத்து சம்பாதிக்காத ஏதோ ஒரு முத்திரை, நம்மை உயர்த்தி வைத்தால் அது பெருமை இல்லை. தாழ்த்தினால் அதை விட அநீதி பெருசா இல்லை. சமூகம் தர அடையாளத்தை உடைச்சு, தன்னுடைய அடையாளத்தை நோக்கி போகிற ஒருத்தனுடைய தேடல் தான் இந்த லேபில். ரொம்ப அழகாக வந்திருக்கு. குறிப்பா கதையாக தமிழில் ஒரு முக்கியமானதாக இருக்குமென நம்புகிறேன்" என்றார்.