கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவியும் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.