சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று யூடியூப்பில் சாதனை படைக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான ஹூக்கும் பாடலைத் தொடர்ந்து ஜூஜூபி பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆக்ஷன் படமாகத் தயாராகி வரும் இந்த படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநில திரையரங்குகளிலும் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சி திரையிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் காட்சி காலை 9 மணியிலிருந்து தொடங்குகிறது. கடந்த 2 ஆம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துவேல் பாண்டியன் என்னும் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஜெயிலர் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட இருக்கின்றன. வெளிநாடுகளில் பல இடங்களில் மல்டிபிளக்ஸ் மற்றும் பி.வி.ஆர் திரையரங்குகளில் முதல் ஆறு நாட்களுக்கு முன்பதிவு டிக்கெட் முழுவதுமாக விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக ரஜினி படத்திற்கு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ரசிகர்களின் கூட்டம் பெருமளவு காணப்படும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் தமிழகம் வந்து ரஜினி படத்தைப் பார்த்த வரலாறும் இருக்கின்றது.
அந்த வகையில், ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வெளிநாடுகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, அமெரிக்காவில் மட்டும் நான்கு லட்சம் டாலர் அளவு மதிப்பிற்கு பீரி புக்கிங்கில் டிக்கெட் விற்பனை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 1 லட்சம் டாலர், ஸ்ரீலங்காவில் இரண்டு லட்சம் டாலர் என முந்தைய தமிழ் படங்களை விட ஜெயிலர் படம் டிக்கெட் விற்பனை செய்து ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளது. இதனிடையில், ரஜினியின் ஜெயிலர் படம் பிரீ புக்கிங்கில் வெளிநாட்டில் மட்டும் ரூ.3 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.