Skip to main content

ஜெயிலர்; திரையரங்கில் சராமாரித் தாக்குதல் - இளைஞர் காயம்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

jailer fans fight in theatre

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. 

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர். 

 

ரசிகர்களைத் தாண்டி திரைப் பிரபலங்களும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். லதா ரஜினிகாந்த், திரையரங்கின் உள் கேக் வெட்டி மகிழ்ந்தார். மேலும் அனிருத் ரசிகர்களுடன் 'ஹுக்கும்...' பாடலைப் பாடி ரசிகர்களுடன் கொண்டாடினார்.  தனுஷ், ரம்யா கிருஷ்ணன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபு, உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர். 

 

இந்நிலையில், சென்னையில் ஒரு திரையரங்கில், ரசிகர்களுக்கிடையே மோதல் நடந்துள்ளது. படம் பார்த்துக் கொண்டிருக்கையில் படத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து சிலர் கோஷம் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோஷம் எழுப்பியவர்களைப் படம் முடிந்ததும் வெளியில் வந்தவுடன் அவர்களை ரஜினி ரசிகர்கள் 4,5 பேர் ஒன்றாகச் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்