Skip to main content

"ஒரு நல்ல திரைப்படம் சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்" - டி. இமான்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

imman about kazhuvethi Moorkan

 

அருள்நிதி நடிப்பில் ‘ராட்சசி’ பட இயக்குநர் சை. கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே 26 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

 

இப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, "கழுவேத்தி மூர்க்கன், 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியைப் பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜுக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். 

 

இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் டி. இமான் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "50 நாட்களாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கழுவேத்தி மூர்க்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

 

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாகக் கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையைச் செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்; அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்... கழுவேத்தி மூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்