இளம் வயதிலே தனது திறமையால் உலக அளவில் கவனம் ஈர்த்த இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம். பியானோ, ட்ரம்ஸ், கிட்டார் என பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய இவர் மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில் லிடியன் நாதஸ்வரம் தனது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இந்த விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ட்ர்ம்ஸ் இசைக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் லிடியன் நாதஸ்வரம். அப்போது அவரிடம் இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எல்லாருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி தெரியும். நேரம் இருந்தால் வந்து கலந்து கொள்வதாக தெரிவித்தனர்” என்றார். இதனால் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் ஒரே மேடையில் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லிடியன் நாதஸ்வரம், ஏ.ஆர் ரஹ்மான் நடத்தி வரும் கே.எம். இசை பள்ளியில் பயின்றவர். இளையராஜாவுடனும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.