1997-ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்' படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் 1998-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்தின் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற இப்படம் 'அக்கா குருவி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை 'மிருகம்', 'சிந்து சமவெளி' படத்தை இயக்கிய சாமி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில், "சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம். நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது.
நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால்தான், அவனை தாக்கினால்தான் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார். இந்த மாதிரி புதிய இயக்குநர்கள் வர வேண்டும் என்று விரும்பி அவர்களின் படங்களுக்கு இசை அமைப்பேன். மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைத்த காரணமும் அதுதான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப் படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.