Skip to main content

“இசை என்னை தெரிந்து வைத்துள்ளது” - இளையராஜா விளக்கம்

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
ilaiyaraaja latest speech

சென்னை சேத்துப்பட்டில் ரமணாஸிரமத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நம் அனைவருக்கும் பகவானை தெரியும், ஆனால் உண்மையாகவே அவரைத் தெரியுமா? எனக் கேட்டால், அவர் அறிய முடியாத பொருள் தான். அதை நான் தெரிந்து கொண்டால் என்னைவிட இந்த உலகத்தில் ஒருவனும் கிடையாது.

ஒருமுறை இயக்குநர் சுப்பிரமணியனின் மகன் கே. ரமணன் என்னிடம் வந்து நேர்காணல் எடுத்தபோது ‘ரமணமகரஷி பற்றி என்ன நினைக்கீர்கள்?’ என்றார். எனக்கு கடகடவென கண்ணீர் கொட்டிவிட்டது. என்னடா இவர் ரஜினிகாந்த், கமலைப் பற்றி கேட்டதுபோல் பகவான் பற்றி கேட்கிறார் என்று. பகவான் யார் என்று ஒருவரும் சொல்லமுடியாது. ஆனால் அவரை பற்றி சொல்லுங்க என கேட்கிறவர்கள் அவரை விட அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். பகவான், புத்தர், இயேசு இவர்களை பற்றிக் கேட்கும்போது அவர்களைவிட கேட்பவர்களுக்கு அறிவு இருக்க வேண்டும். நமக்கு பகவானை தெரியாது, ஆனால் பகவானுக்கு நம்மை தெரியும். அதனால்தான் இங்கு கூடி இருக்கிறோம். எனக்கு எவ்வளவு இசை தெரியும் என்பது விஷயம் இல்லை. ஆனால், இசை என்னை தெரிந்து வைத்துள்ளது. அதுபோல பகவானைப் பற்றி பேச யோக்கியதை உடையவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா? என்பது என்னுடைய கேள்வி. ஆனால் உண்மையாகவே யாருக்கும் யோக்கியதை இல்லை. 

பகவான் தவத்தில் இருக்கும்போது அவர் உடம்பில் வாழவில்லை. உடலை நமக்கு வெறும் காட்சியாக காட்டினார். அவருக்கு என்னைக்கு மரணம் ஏற்பட்டதோ அன்றைக்கே உடல் போய்விட்டது. அண்ணாமலை சாமி பகவானிடம்  ‘உங்களுக்கு காம உணர்வு வந்தது இல்லையா’ எனக் கேட்கிறார். அதற்கு அவர் ‘தேகமே போய்விட்டது மற்ற சமாச்சாரம் வராது’ என்று சொல்லியுள்ளார். இங்கு வரும்போது எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. சில நேரங்களில் சில விஷயங்களை நான் எழுதி வைப்பேன். அதையே இவர்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்” என்றார். உடனே அந்த புத்தகத்தை கையில் எடுத்த அவர், “இந்தப் புத்தகத்தை நான் உங்களுக்கு படித்து காண்பித்தாலே பகவானைப் பற்றி பேசாமல் பேசி காண்பித்ததுபோல் இருக்கும். நான் தான் சொன்னேன் அவரை பற்றி பேச யோக்கியதை இல்லையென்று அதனால் எனக்கும் யோக்கியதை இல்லை. அதனாலயே நான் பேசுகிறேன்” என்று அந்த புத்தகத்தை வாசித்து காண்பித்தார்.

சார்ந்த செய்திகள்