இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025ன் நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அப்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
பின்பு சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் படப் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் இளையராஜா, கமல், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தை ஏற்கெனவே தகவல் வெளியானது போல் அருண் மாதேஷ்வரன் தான் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். முன்னதாக கேப்டம் மில்லர் படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றது. பின்பு மீண்டும் தனுஷை வைத்து அவரது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால், அந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தில் தனுஷை வைத்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. முன்னதாக பாலிவுட் இயக்குநர் பால்கி இளையராஜா பயோபிக்கை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.