மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தொடர் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா, இயக்குநர் ரஞ்சித் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதை ரஞ்சித் மறுக்க, தனது சினிமா அகாடமி பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. அதன் பின்பு நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதை இவரும் மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். இதில் அந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயசூர்யா மீது மற்றொரு பிரபல நடிகை குற்றம் சாட்டியதையடுத்து, ஜாமீனில் வெளிவராத பிரிவில் அவர் மீது வழக்கு பாய்ந்தது.
இதனிடையே கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. முகேஷ், முன் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை வரை (03.09.2024) அவரை கைது செய்ய தடை விதித்தது. இதையடுத்து முகேஷ், எம்.எல்.ஏ. பதவியில் இருக்கலாமா ராஜினாமா செய்ய வேண்டுமா என கலந்தாலோசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு, பதவியை அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என முடிவெடுத்திருந்தது.
இந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டில், தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் சிக்கி வரும் நிலையில், மலையாள சினிமா நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருந்தனர். இதனிடையே பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகா, பாலியல் துன்புறுத்தல் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது என்றும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை படம்பிடித்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கேரவன் குறித்து ராதிகாவின் குற்றச்சாட்டிற்கு, கேரவன் உரிமையாளர் சங்கத்தின் தலைவர், தமிழ் சினிமாவில் அப்படி கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்படுவது இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராதிகாவிடம் தொலைப்பேசி வாயிலாக அவர் கூறிய கேரவன் சம்பவம் குறித்து கேரள மாநில அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியுள்ளது.