பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் நிஷிகாந்த் காமத். நீங்கள் இனி இல்லை என்று என்னால் நம்ப முடியவில்லை. "ஃபோர்ஸ்” படத்திற்காக உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்" என கூறியுள்ளார்.