முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் தமிழ்ப்படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married - LGM) என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், ”இப்படத்தை பற்றி பேசும் முன், தோனி சாருக்கு நன்றி. நீங்கள் இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்று கொடுத்ததற்காக மட்டும் நான் நன்றி சொல்லவில்லை. எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் பலமுறை நினைத்துப் பார்க்கும்படியான பல அற்புதமான தருணங்களை எங்களுக்கு கொடுத்திருப்பதற்காகவும் நன்றி. நாம் உங்கள் தலைமையில் கோப்பையை வெல்வது அடுத்த ஆண்டும் தொடரும் என்று நம்புகிறேன்.
சாக்ஷி தோனி மேடம் இந்தப் படத்திற்காக கொடுத்த கதைக்கரு மிகவும் வித்தியாசமான ஒன்று. இந்தப் படத்தை எல்லா ஆடியன்ஸும் அவர்களோடு எளிதாக தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். இது உலகத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையைப் பேசுகிறது. உலகமெங்கும் இருக்கும் எல்லா குடும்பத்தினரும் இப்படத்தை எளிதாக தங்கள் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு அற்புதமான கதைக்கருவை கொடுத்ததற்காக நான் ஷாக்ஷி மேடத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு புதிய சகோதரர் கிடைத்திருக்கிறார் அவர் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தான்.
இப்படத்தில் காமெடிக் காட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் இவற்றையெல்லாம் தாண்டி மிகத் தனித்தன்மை வாய்ந்த ஒரு விசயம் இருக்கிறது. உங்கள் குடும்பத்தினை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அது கடவுள் நமக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு. அப்படி எல்லா குடும்பத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு விசயம் இப்படத்தில் இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்” என்று பேசினார்.