மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, "ரோஜா படத்திற்கு பிறகு மணிரத்னம் கூட தேச பக்தி உள்ள படங்களை எடுக்கவில்லை. ஆனால் இது மணிரத்னத்தின் புதிய முயற்சி, தமிழ் சினிமாவிற்கு பொன்னியின் செல்வன் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. வெறும் சாதியை வைத்துக்கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் எடுத்த படங்களின் ட்ரெண்டை மாற்றி, நம் மன்னர்கள், நம்முடைய பரம்பரையை பற்றி அறிய வேண்டிய படங்களை மக்கள் ரசிக்க தொடங்கி விடுவார்கள். ரசிகர்களின் ருசி மாறும் போது படைப்பாளிகளும் படைப்பை அதற்கு ஏற்றவாறு மாற்றி தான் கொடுக்க வேண்டும்.
ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்கிறார்கள். அதேபோல் மனுஸ்மிர்தி காலத்தில் இந்து இருந்ததா? என்ற பல கேள்விகள் இருக்கிறது. திமுக பாதுகாத்து வைத்திருக்கும் கும்பல்கள் தான் சிதைப்பதை மட்டுமே நோக்கமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்து வருகின்றனர். படத்தில் இந்துத்துவாவை பற்றி எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன் நாவலில் என்ன இருக்கிறதோ அதைதான் மணிரத்னம் படமாக இயக்கியிருக்கிறார். தேசபக்தி, வலது சாரியை மையமாக வைத்து படம் எடுத்தால் ஓடாது என்று படம் எடுத்தவர்கள் பயந்துபோய் வேண்டுமென்றே இந்த மாதிரியான சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
பிராய்லர் கோழி உடம்புக்கு கெட்டது, நாட்டுக்கோழி நல்லது என்று நாம் சொல்கிறேம். பிராய்லர் கோழி வருவதற்கு முன்பு அது பெயர் கோழிதான், நாட்டு கோழி இல்லை. அது போலத்தான் இஸ்லாமும், கிருஸ்துவமும் இல்லாததால், இந்து மதம் மட்டும் இருந்த காரணத்தால் அதை தர்மம் என்று சொன்னார்கள். அது பழமையானதாக இருந்ததால் சனாதன தர்மம் என்று சொன்னார்கள். அதனால் அன்றைக்கு இந்து என்று இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கமல்ஹாசன், ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை, 8 ஆம் நூற்றாண்டில் தான் ஆதிசங்கரர் 6 மதங்களை இணைத்து இந்து மதம் என்று சொன்னதாக கூறினார். அதே மிகவும் தவறு. ராஜராஜ சோழன் ஆட்சிகாலம் 10 ஆம் நூற்றாண்டில்தான். அப்படி இருக்கும் பட்சத்தில் சோழர்காலத்தில் இந்து மதம் இருந்திருக்கும் தானே. அப்புறம் ஏன் இந்து மதம் இல்லை என்று சொல்கிறார். ஆகையால் ஆதிசங்கரர் 8 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தை இணைத்ததாக கமல் சொல்வது தவறு. இவர்களுக்கு இந்துவும், தெரியாது ஒன்னும் தெரியாது. தமிழன் மதமில்லாதவன், அவன் முஸ்லிமாக மாறினால் நாம் கேள்வி கேட்பதில்லை, கிறிஸ்தவனாக மாறினால் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இந்துவாக மாறினால் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்" எனக் கட்டமாக பேசியுள்ளார்.